மணல் அகழ்வைத் தடுப்போம்; இயற்கையைக் பாதுகாப்போம்!!

கதையொன்று சொல்கிறேன் கேள்!! காதல் கதையொன்று சொல்கிறேன் கேள்!! இலகுவாய்ப் புரிந்து கொள்ள இதுவொன்றும் மனிதக் காதல் அல்ல, இயற்கையின் புனிதமான காதல்!! கடலது கரையுடன் கொண்ட காதல்!! உன்னையும் என்னையும் பிரம்மிக்க வைத்த காதல்!!
ஆழ்கடலில் பேரலையென வந்த போதிலும் கரையதைக் கண்டதும், பணிந்து, கொஞ்சி விளையாட, சிறு அலையென கரையைத் தொட்டுச் சென்றதே, அட்டகாசக் கடல்!!! சின்னஞ்சிறார்களை தன் மேல் தாங்கி, கடலலைக்காய்க் காத்திருந்து, தன் மேல் வருடிச் செல்லும் அலைகளின் மேல் துள்ளி விளையாட அனுமதித்ததே, அழகிய கரை!!
காலை வேளைகளில் உடற்பயிற்சிக்கெனவும், மாலை நேரத்தில் களைப்பாரவெனவும் வருவோரை ஒன்றாய் வரவேற்றதே இவ் இயற்கைக் காதல் ஜோடிகள்!!
யார் கண் பட்டதோ; கரையானவள் கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடப்பட்டாள்!! ஒவ்வொரு முறையும் கடலானவன் கரையைத் தொட வருகையில், கரையானவள் அழிந்து கொண்டிருந்தாள்... இல்லை.. அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள், சில சுயநலவாதிகளால்...!!!
தன் கண் முன்னே தன் அன்புக்குரிய கரைக்கு அட்டூழியம் நடப்பதைக் கண்டு பொங்கி வந்தான், கடலானவன்!! சவால் விடுத்தான் அவன், "என் கரையைக் கைப்பற்றிய உங்களது நிலத்தரையை ஆக்கிரமிப்பேன்" என்று!! திருப்பியடிக்கத் துவங்கினான்!!!
கடலின் பலிதீர்க்கும் படலம் தொடர்வதை அறிந்தும், கரைகளை இன்னும் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர் , சில சுயநலவாதிகள்....
அழகுக் கடற்கரை பற்றி பாடப்புத்தகங்களில் மட்டுமே காண்பர், துள்ளியோடும் எதிர்கால சிறார்கள்!! கடலைத் தேடிச் சென்ற காலம் கடந்து, கடல் நம்மை தேடி வரும் காலம் வந்துவிட்டதே!! இன்னும் சில நாட்களில், கடலுக்கு இரையாக்க நேரிடும், நம் வீடுகளை!! கடலாய்வாளர்கள் கைப்பற்றிக்கொள்வர் , நம் நிலங்களை!! "கடலுக்கடியில் ஓர் நகரம்" என்று வரலாறு பேசும் நம் நகரங்களை !! நம் பரம்பரையே அகதிகளாவார்கள், வாழ இடமின்றி!! எவ்விடத்தில் நிகழினும், கடல்மண் அகழ்வு நிறுத்தப்பட வேண்டியதொன்றே!!!
கடலுக்கு இயற்கை அமைத்த அரண், கரை ஆகும்!! மனிதா நீ கரையை சூறையாடினால், கடல் உன்னையும் உன் தேசத்தையும் சூறையாடி விடும்!!
வெளிநாட்டுச் சதிகளினால் இலங்கையின் கடற்பரப்பு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதென்பதை மறந்துவிடாதே!!!
இலவசமாகக் கிடைத்ததால் இயற்கையின் அருமை தெரியாமல் போய்விட்டதே நமக்கு!!
மாங்காய் வடிவ இலங்கை, மாங்கொட்டை வடிவம் பெற முன் மணல் அகழ்வை தடுத்து நிறுத்த முனைவோம்!!!
இப்(f)ஹாம் அஸ்லம் (MSc in Medical Physics - University of Colombo)

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!