விவேகமற்ற வேகம்!!

இருண்ட இரவில் ஆள் அரவமற்ற பாதையில் அதியுயர் வேகத்தில் புல்லட்டாய்ப் (bullet) பறந்தது அவ்வண்டி!
வண்டியினுள் இரு குடும்பம், தன் கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணும், தன் மடியில் சிறு மகளைத் தூங்க வைத்தவராய் அப்பெண்ணின் கணவரும், ஓட்டுனர் பக்கத்து ஆசனத்தில் பருவ வயது மூத்த மகனும் அமர்ந்திருக்க ; அப்பெண்ணின் கணவனின் தங்கையும் அவர் கணவரும் தம்மிரு பாலகர்களுடன் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். இவர்களது பயணமோ இப்பெண்ணின் கணவரை வெளிநாட்டு வேலைக்கு வழியனுப்பி வைக்க விமான நிலையம் நோக்கியதேயாகும்!
விமான நிலையத்திற்கு இன்னும் மூன்று நேரத்தினுள் உள்நுழைய வேண்டும் என்னும் ஒரு பணி ஓட்டுநருக்கு வழங்கப் பட்டிருப்பதும் பாதையின் அமைதியுமே இந்த வேகத்திற்கான காரணம்!
ஜன்னலினூடு புகும் இதமான குளிர்ந்த காற்றில் வருடலில் ஒவ்வொருவராய்க் கண்ணயர, ஓட்டுனரும் வெளிநாடு செல்ல ஆயத்தமாகும் அப்பெண்ணின் கணவரும் விழித்திருந்தனர்.
வண்டியின் வேகம் அந்நபரைக் கிலி கொள்ளச் செய்தாலும், பாதையின் அமைதியும் பிரயாணத்தின் அவசரமும் ஓட்டுனரின் திறமை மீது வைத்த நம்பிக்கையும் அவரை அமைதி கொள்ளச் செய்தன.
சரியான நேரத்திற்கு விமான நிலையத்தை அடைந்து விட வேண்டும் என்ற மனவோட்டத்துடன், வீட்டிலிருந்து நேரத்திற்கு வெளிக்கிடாமையை எண்ணி தன்னைத் தானே நொந்து கொண்டார், முன்னே பொருத்தப் பட்டிருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியில் ஓட்டுநரை ஓரக்கண்ணால் பார்த்தவராய். மலையகத்தின் வளைவு நெளிவுகளுடனான பாதையைப் பார்த்தவாறே ஓட்டுநரை எதேச்சையாய்ப் பார்க்க, அவர் தூக்கக் கலக்கத்தில் கண்சிமிட்டுவதை அவதானித்தவரே கத்தத் துவங்கினார் ஓட்டுநரை நோக்கி!!
அச் சத்தம் கேட்டு விழிப்புற்ற ஓட்டுனர் பிரேக்கை சடாரென அழுத்த வண்டி விரைவாக நிறுத்தப் பட்டது, கூடவே பெரும் ஆபத்தொன்று நிகழ்வதும் தடுக்கப்பட்டது.
அவ்வண்டியினுள் எல்லோரும் முழிப்படைய, அதிர்ச்சியுடன் வண்டியிலிருந்து வெளியிறங்கினர்; கண் முன்னே கண்ணுக்கெட்டா ஆழமுடைய பள்ளத்தாக்கைக் கண்டு மெய் சிலிர்த்து நின்றனர். ஒவ்வொருவரும் மயிரிழையில் உயிர் தப்பிய சந்தோஷத்தில் இறைவனைத் துதித்து அவ்விடத்தில் சிறிது நேரம் இளைப்பாறினர். அவ்வதிர்ச்சியால் தூக்கம் பறக்க, வண்டியானது விமான நிலையம் நோக்கி சாதாரண வேகத்தில் சென்று, உரிய நேரத்தில் விமான நிலையத்தை அடைந்தது!!
பசியுடன் இரையை விரட்டும் புலியின் வேகத்துடன் பயணிக்கும் வண்டி கண்சிமிட்டும் நேரத்திலும் கணதூரம் பாய்ந்துவிடுமென அஞ்சி நிதானத்துடன் விழித்திருந்த அக்குடும்பத் தலைவனால் மாபெரும் விபத்தொன்று தடுக்கப்பட்டதே!
இன்றைய நாட்களில் இவ்வாறான பல விபத்துக்கள் நிகழ்ந்து கொன்டு தான் இருக்கின்றன. திட்டமிடல் இல்லாத பயணமும். ஓட்டுனரின் அசமந்த போக்கும் முக்கியமான காரணிகளாகும்.
உங்கள் பயணங்களை சரியாக திட்டமிடுங்கள்.
முடியுமான அளவு இரவு நேர பயணங்களைத் தவிருங்கள்.
இரவு நேர பயணங்கள் அமையுமாயின் ஓட்டுனருக்குத் துணையாய் யாராவது ஒருவராவது விழித்திருந்து பேச்சுத் துணை கொடுங்கள்.
ஓட்டுனரும் ஓர் மனிதனே, அவருக்கும் நித்திரை பொதுவானதே.
உங்கள் பிராயணத் திட்டமிடலில் ஓட்டுனர் தூங்கவும் குறைந்தது 45 நிமிடங்களாவது ஒதுக்குங்கள்.
இயன்றளவு விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
பயண நேரத்தைக் குறைவாக்க வேகமாகப் பயணிப்பின் உங்கள் ஆயுளைக் குறைப்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்.

இப்ஹாம் அஸ்லம் M.Sc Medical Physics (Reading) University of Colombo

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!