இன்றொரு சம்பவம்!!

கேன்சர் நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்ட நோயாளிகளின் உடலின் எப்பாகத்தில் கேன்சர் ஆக்கிரமித்துள்ளதென்பதைக் கண்டறியும் பரிசோதனை (practical session) இன்று மஹரகம புற்றுநோய் வைத்திய சாலையில் நடைபெற்றது. "புற்றுநோய்க்கட்டியின்(Tumor) அமைவிடத்தை அறிதல், ரேடியோதெரபி முறை (Radiotherapy) மூலம் குணப்படுத்த திட்டமிடுதல்" போன்றவையே இன்றைய தலைப்புக்களாய் இருந்தன.
வழக்கமாக "டம்மி பான்டம்" (dummy phantom - மனித உடலையொத்த போலி உடல்) பயன்படுத்தப்பட்டே பரிசோதனைகள் நடைபெறும். வழக்கத்திற்கு மாறாக இன்று ஒரு நோயாளியினை அழைத்து வந்தனர். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சையில் இது முக்கியமான ஓர் அங்கமாகும். அங்கு பொறுப்பாகவுள்ள மருத்துவ பௌதிகவியலாளர்கள் (medical Physicists) தம் வேளையைத் தொடர, நாமோ பார்வையாளர்களாய் இருந்து அவதானங்களை மேற்கொண்டு புதிய விஷயங்களைக் கற்றோம். அவ்வேளையில் "நோயாளியின் மனநிலை என்ன" என்பதையும் நேரடியாகக் கண்டோம்.
விடயத்திற்கு வருகிறேன்... தற்செயலாய் நோயாளியின் மருத்துவ அறிக்கையைக் காண நேரிட்டது. அவரது மூக்கின் வலப்பகுதியில் கேன்சர் கட்டி இருப்பதாய் அறிக்கையில் இருந்தது. இவ்வாறோனோரின் மூக்கை அழுத்தினால் இரத்தம் வருமென்று, அங்கு பொறுப்பாய் இருந்த தாதி கூறினார். மருத்துவ அறிக்கையைப் பார்க்கும் போது அதிர்ந்த விடயம் என்னவெனில், ஐந்து நாட்களில் அவரது எடை நான்கு கிலோகிராம்களினால் குறைந்திருந்தது. இவ்வகையான புற்றுநோயானது குணப்படுத்தக்கூடியவையே. இருந்தும் அதன் பாதிப்பு, நோயுற்ற நிலையில் நோயாளியின் மனவோட்டம் என்பவை சொல்லில் அடங்காதவையே!!
"உடல்வலிகள், மனவலிகள், கேள்விக்குறியான அடுத்த நொடி, மருத்துவ செலவுகளால் மனவுளைச்சல்கள்" என பலவற்றைத் தாங்கியும் தாண்டியும் வர, அதற்கென்றே ஓர் மனதைரியம் வேண்டும்.
பரிசோதனை முடிந்த பின்னர் வெளியே வந்த அந் நோயாளியின் கண்ணில் மரணபயத்தைக் கண்டேன்;
"சிகரெட் பக்கமே நெருங்கக் கூடாது" என மனதில் நினைத்துக் கொண்டே பரிசோதனை முடிந்து வீடு திரும்புவதற்கு பாதையில் இறங்கியதும் வாயில் சிகரெட்டுடன் பாதையில் இரு இளைஞர்களையும் கண்டேன்.😐😐
பாடசாலை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஓர் கோரிக்கை விடுக்கிறேன். உங்கள் பிள்ளைகளை ஒரு தடவையேனும் புற்றுநோய் மருத்துவசாலைக்கு அழைத்து விழிப்புணர்வைக் கொடுக்க முன் வாருங்கள். வளரும் சந்ததியினராவது புற்றுநோய் இன்றி வாழட்டும்..
Ifham Aslam MSc in Medical Physics (Colombo)
23.09.2018

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!