உங்கள் மகள் ஒ/எல் வரை படித்தால் போதுமா??

நடந்து முடிந்தது சாதாரண தரப்பரீட்சை!
கண் விழித்துப் படித்த மாணவர்களும், போ(f)ன் பிடித்துப் போனதால் படிக்காத மாணவர்களும் தம் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு எடுத்த முயற்சியே இது!!! பலருக்கு இது நம்பிக்கையான ஓர் முயற்சியே !!
இவர்களுள் பெறுபேறுகளின் அடிப்படையில் அல்லது பெற்றோரின் ஆசையில் உயர்தர கல்வி தொடர்வோர் பலர் !! பெற்றோரின் எதிர்ப்பை மீறி உயர்தரம் கற்க முனைவர் சிலர்... பெருந்தொகையான மாணவர்கள் உயர்தர கல்வி தொடரினும் ,சில திறமையான மாணவிகள் வீட்டிலேயே முடக்கப்படுவர், சில தவறான முன்னுதாரணங்கள் காரணமாக !! இக்கவிதை அம்மாணவிகள் பற்றியதே...!!! மன்னிக்க வேண்டும்... இக் கவிதை வடிவிலான கட்டுரை அவர்கள் பற்றியதே.... ஒரு சமுதாய விழிப்புணர்வு பற்றியதே!!
பதினொரு வருட பயிற்சி! பல வகையான முயற்சி! வகுப்பில் மாணவர்களோ இவர்களின் கட்சி!! இருந்தும், உயர்தரம் செய்ய நிராகரிக்கப்பட்டவர்கள் பெற்றோரால்!!! இவர்கள் என்ன படிப்பறிவற்ற பிள்ளைகளா ? இல்லவே இல்லை !! படிப்பது நிராகரிக்கப்பட்ட பிள்ளைகள் !!! முயற்சி செய்ய நிராகரிக்கப்பட்டவர்கள் !!!
இவர்களது மாணவர் தேர்ச்சி அறிக்கையை எடுத்துப் பாருங்கள், ஆச்சரியமடைவீர்கள் !! ஏன் இவர்கள் உயர்தரம் கற்கவில்லை என்று!! வகுப்புக்களில் கலக்கிய மாணவர்கள் இவர்கள் , பல ஆசிரியர்களின் நம்பிக்கை மிகுந்த மாணவர்கள் இவர்கள் !! இருந்தும் ஏன் அவர்கள் உணர்வுகள் மறுக்கப்பட்டன ; சிந்தித்தால் தெளிவடைவீர் !!!
இதற்குக் காரணம் தேடின் , அவர்களது பெற்றோரின் பக்கம் ஆட்காட்டி விரல் சென்றாலும், உண்மையாக ஆட்காட்டி விரல்கள் நோக்க வேண்டியது சில தன்னிலை மறந்த , சமூகப்பற்று குறைந்த சில முன்னால் உயர்தர மாணவ மாணவிகளையும் அவர்கள் பெற்றோர்களையுமே !!
ஆம் , அவர்கள் காட்டிய சில தவறான முன்னுதாரணங்களே இவர்களது எதிர்காலத்தில் விளையாடியது !!
வீட்டை விட்டு நம்பிக்கையுடன் படிக்க அனுப்பினால் படிப்பதை தவிர்த்து வேறு விடயங்கள் செய்து விட்டு , அவர்களை பின் தொடர்ந்து வரக்கூடிய மாணவிகளின் பெற்றோர் மனதில் உயர் தரம் பற்றிய பயம் உண்டு பண்ணியவர்கள் அவர்களே!!!
ஒரு பெண் கல்வி கற்பது , ஒரு சமுதாயமே கற்பது போல... ஒரு பெண் தவறு இழைப்பின் அதன் தாக்கம் , அச் சமுதாயத்தில் உள்ள மற்ற பெண்களின் வாழ்விலும் பிரதிபலிக்கும்....
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கைகளிலே! உங்கள் முடிவே ,அவர்களின் வாழ்க்கை!! ஒரு பெண் பிள்ளையின் திருமணத்துடன் உங்கள் கடமை முடிந்து விடும் என்று நினைப்பது மடமையே!! எப்போதும் மறந்துவிடாதீர், சமூகக் கடமை எனும் ஒரு விடயம் இருப்பதை !! ஏன் இன்னும் எங்கள் சமூகம் கல்வியில் பின் தங்கியிருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்கவில்லையா?!! அதற்கு நேரம் தான் இல்லையா?!! "எதிர்கால தலைவர்களை உருவாக்கும் பெரும் பணி உங்கள் மகள்களின் கைகளிலேயே தங்கியுள்ளது" என்பது நினைவில் தான் இல்லையா?!!!
உலகம் அறியாதவர்களாக வளர்த்து விடாதீர்கள், உங்கள் மகள்களை!! உங்கள் சந்ததியும் உலகம் தெரியா சந்ததி ஆகிவிட கூடும்!! ஒரு பெண் கற்றால் ஒரு சந்ததியே கற்றது போலாகும்!! "எதிர்காலத்தில் குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டியவர்கள் அவர்கள்" என்பதனையும் , "அப்போது நீங்கள் அவர்களுக்கு துணையாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு" என்பதனையும் , "குடும்பத்தலைவியாக எல்லா விடயங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியவர்கள் அவர்களே" என்பதனையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!!
ஏதோ ஒரு சில தவறான முன்னுதாரணங்களை பார்த்து ; உங்கள் பிள்ளைகளை அவர்களுடன் ஒப்பிடாதீர்கள்!!! பல பெண்கள் நிகழ்காலத்தில் நல்ல முன்னுதாரணங்களாகத் திகழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் !!! ஏன் , நீங்கள் கூட அவர்களின் பெருமைகள் பேசிக் கொண்டும் தான் இருக்கிறீர்கள் !! ஏன் உங்கள் பிள்ளைகளையும் சாதனையாளர்களாக உருவாக்கிடக்கூடாது!! சிந்தியுங்கள் !!!
உங்கள் மனைவிக்கு, மகள்களுக்கு , உடன் பிறந்த பெண்களுக்கு தேவைகள் ஏற்படின் பெண் வைத்தியர்களையும் , பெண் உத்தியோகத்தர்களையும் தேடும் நீங்கள் , ஏன் உங்கள் மகள்களின் ஆசைக்கு இணங்க அவர்களையும் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு ஆளாக்கக் கூடாது?!!
இறைவன் எல்லா மனிதர்களுக்கும் ஒவ்வொரு திறமையைக் கொடுத்து இருப்பான்; உங்கள் பிள்ளைகளும் திறமையாளர்களே ஏதோ ஒரு வகையில் , அதை அறிந்து அவர்களை உற்சாகப்படுத்துவதே பெருமையான விடயம்!!
பெற்றோர்களே!!! "எங்கள் சமூகத்தின் எதிர்காலம் பெண்பிள்ளைகளின் கல்வி அறிவில் தான் தங்கியுள்ளது" என்பதை மறவாதீர்!! "எதிர்கால தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டியது ஒரு தாயின் பாசறையிலேயே" என்பதனையும் மறவாதீர்!!!
அவர்களின் விருப்பத்திற்கு இணங்க ஒழுக்கமான கல்வியை பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள் !!!
எதிர்கால தலைவர்களை உருவாக்க இன்றே விதை போடுங்கள்!!!!

இப்ஹாம் அஸ்லம்
M.Sc Medical Physics (Reading)
University of Colombo

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!