என்னை உறுத்திய சில கேள்விகள்!!

தாய் நாட்டுக்காகவும், தன் சமுகத்திற்காகவும், இன நல்லுறவுக்காகவும் குரல் கொடுத்து கர்ச்சித்து சிங்கமென வாழ்ந்து மறைந்த மாமனிதர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.
மகிழ்ச்சி..
இன, மத, மொழி, கட்சி பேதமின்றி எல்லோராலும் நேசிக்கப்படக் அவர் வாழ்ந்த வாழ்க்கை முறையே!! நேரடியாக நான் காணாவிட்டாலும் அவர் சார்ந்த ஆக்கங்கள் சொல்லித் தந்தவை இதுவொன்றே!!
தேர்தல் காலங்களிலும், அவர் பிறந்த மற்றும் இறந்த தினங்களிலும் அவரை ஞாபகப்படுத்தும் நாம், ஏன் அவர் வழியை தினசரி வாழ்க்கையில் பின்பற்றி நடக்கக்கூடாது??
எந்தநிலையிலும் எதற்கும் அஞ்சாது சமூகத்திற்காய் குரல் கொடுத்தார் அவர். அவர் புகழ் பாடும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது சமூகப்பற்று?!!! தம் சுயநலத்திற்காக சமூகத்தையே விற்றுக் கொண்டிருக்கிறார்கள் நம்மில் பலர்.. குறைந்தபட்சம் போதை, ஊரில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராகவாவது நம்மில் எத்தனை பேர் குரல் கொடுக்கின்றனர்??
தன் சமூகத்தின் கல்விக்காகவும் மருத்துவத்திற்காவும் பல திட்டங்களை வகுத்தார் அவர், நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ஊரில் எத்தனை ஏழைப்பிள்ளைகள் போதிய வசதியின்றி கல்வியை இடைநிறுத்தி தொழிலுக்கு செல்கின்றனர் என்று.. அவர்கள் பற்றி சிந்தித்தோமா?? அவர்களைப் பற்றி கேலியாக வேண்டுமானால் பேசியிருக்கலாம்!! வீணாக செலவு செய்யும் பணத்தை வறியோரின் மருத்துவ செலவுக்கு உதவியிருந்தாலாவது நன்மைகள் கிடைத்திருக்கும்!! குறைந்தபட்சம், ஏன் அஷ்ரப் அவர்களின் பெயரில் "புற்றுநோய் நிதியம்" ஒன்றையாவது செயற்படுத்தக்கூடாது??
எழுச்சி மிக்க இளைஞர்களிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியிருப்பதை உணர்ந்து செயல்பட்டார் அவர். நம்மில் எத்தனை இளைஞர்கள் சமூகத்திற்காய் பேச தயாராய் இருக்கிறோம்.. எத்தனை பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு சோற்றுடன் சமூகப்பற்றையும் ஊட்டி வளர்க்கின்றனர்?? எல்லோருக்கும் சமூக வலையத்தள கேளிக்கைகளுக்கும் வீண் பேச்சுக்களுக்குமே நேரம் போதுமாகி விடுகிறதே!!
"நாம் அல்லாஹ்வின் பாதையில் நடந்து வந்தவர்கள், நீங்கள் எல்லாம் தொடர்ந்தும் அப்பாதையில் நடக்க இருப்பவர்கள்" என உரத்துக் கூறினார் அவர். "படைத்த இறைவனுக்கு மாத்திரமே அஞ்சிய மாபெரும் வீரரவர்" எனப் புகழும் நம்மில் எத்தனை பேர் ஐவேளை தொழுதும், இறைபக்தியுடன் பொழுதைக் கழிக்கின்றோம்?? பொய், ஏமாற்று, வட்டி, புறம் என இன்னோரன்ன விடயங்களை நம்மில் பலர் இன்னும் செய்து கொண்டு தானே இருக்கின்றனர்!!!
அஷ்ரப் அவர்கள் ஆளுமை மிக்கவோர் சட்டத்தரணியாவார் என்பது யாவரும் அறிந்த உண்மையே!! அவர்கள் இருந்திருந்தால் சமுகத்தில் ஆளுமைமிக்க இளைஞர்களை உருவாக்கி இருப்பார்கள். ஆளுமைமிக்க வைத்தியர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என எல்லா துறைகளிலும் ஆளுமைமிக்க சமூகமொன்றை உருவாக்கியிருந்திருப்பார்..
"ஓரத்தில் நின்று கொண்டு ஓயாமல் தர்க்கம் செய்யும் வீரத்திற்கு இன்றே வையுங்கள் முற்றுப்புள்ளி!" எனப் போலி வீரர்களின் தோலுரித்தார் அவர். நம்மில் பலர் இன்னும் அவர் மேற்கோள் காட்டிய போலி வீரர்களாய்த் தானே இருக்கிறோம்!!
'ஆளுமை', 'சமூகப்பற்று' என்பனவே எல்லோராலும் விரும்பப்பட்டது. எத்துறையைச் சார்ந்தவர்களாயினும் இவ்விரு பண்புகளும் தம்மிடம் இருக்குமெனின் அவர்களும் அஷ்ரப் அவர்கள் உருவாக்க நினைத்த ஆளுமைமிக்கவர்களே!!
"அஷ்ரப் போன்ற சிறந்த தலைவர் மீண்டும் கிடைக்க மாட்டாரா?" என ஏங்கும் நீங்கள், ஏன் உங்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே அஷ்ரப் அவர்களை அறிமுகம் செய்யக்கூடாது?? ஏன் அவர் கொண்ட இறையச்சம் பற்றி எடுத்துரைக்கக் கூடாது?? தலைமைத்துவம் பற்றி சொல்லிக் கொடுக்கக் கூடாது?? சமூகத்தின் தேவைகள் குறித்து விழிப்புணர்வு கொடுக்கக் கூடாது?? அவர்கள் விரும்பின், ஏன் உங்கள் பிள்ளைகள் "அடுத்த" அஷ்ரபாக உருவாக்கக் கூடாது??
ஏன், இதை வாசிக்கும் நீங்களே அடுத்த அஷ்ரபாய் இருக்கக்கூடாது??
இறுதியாக சில கேள்விகள்! தலைவர் உங்களிடம் விட்டுச் சென்ற வீரம் எங்கே?? அவர் காட்டித்தந்த தியாக குணம் எங்கே?? அவர் வளர்த்தெடுத்த போராளிகள் எங்கே?? அவர் உங்களிடம் எதிர்பார்த்த சமூக மாற்றம் எங்கே?? அவர் உருவாக்க நினைத்த ஆளுமைமிக்கவர்கள் எங்கே?? இறைவனின் பாதையில் தொடர்ந்து போராட அவர் ஊக்கப்படுத்திய போராளிகள் எங்கே??
"ஒரு துப்பாக்கியின் ரவைககளினால் எனது இரைச்சல் அடங்கி விட்டதற்காய் எதிரி வென்று விட்டான் என்று நீ குழம்பி விடக்கூடாது!!!"
போராளிகளே!! புறப்படுங்கள்!!
ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை!!
போராளிகளே!! புறப்படுங்கள்!!
- Ifham Aslam - M.Sc in Medical physics (reading) 17.09.2018

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!