இதுவும் ஒரு தொடர்கதையே!!

மனக்கலக்கங்களுடன் சிலர்; எதிர்பார்ப்புகளுடன் இன்னும் சிலர்; " சுற்றத்தாருக்கு பயந்து முற்றத்துக்கு இறங்காமல் தப்பிப்பது எப்படி " என்று திட்டம் தீட்டிக் கொண்டிருப்பவர்கள் பலர்!! எனினும் இவர்கள் அனைவரும் இணையும் ஒரே புள்ளி Dec 28 !
ஆம், இவர்கள் முன்னால் உயர்தர வாசிகள்! இவர்களின் காத்திருப்பு கட்டிக் கொடுக்கப்பட்ட விடைத்தாளிற்கு கிடைக்கவிருக்கும் பெறுபேறுகளுக்காகவும் வெட்டுப் புள்ளிகளுக்காகவுமே!!!
விடியப்போகும் அத்தினம் முடியும் தருவாயில் பல உணர்வுக் கலவைகளை சுமந்திருக்கும்!
சிலருக்கு இன்பமாகவும் ; சிலருக்கு பூரிப்பாகவும் ; வேறு சிலருக்கு ஏமாற்றமாகவும் ; இன்னும் பலருக்கு சோகமாகவுமே நிறைவு பெறும் அத்தினம்...!!
யாருக்கு எவ்வாறு நிறைவு பெற்றிருப்பினும் , பல பாடங்கள் சொல்லி தந்து விட்டே சென்றிருக்கும் அத்தினம் !!
மாணவா!! நீ கலங்காதே..!! ஒரு பெறுபேறில் உன் வாழ்வை தீர்மானிக்காதே! நீயும் வெற்றியாளன் தான் !! இரண்டரை வருடங்களுக்கு மேல் பொறுமையாய் நீ இருந்தாயே!! அப்போதே நீ வெற்றி பெற்று விட்டாய்!! ஒரு பொறுமையாளனாக ...!!
உன்னைச் சுற்றி பல நண்பர்களின் கையில் பணம் புலங்குவதை கண்டும் நீ அவர்கள் வழியில் செல்லாமலும் , பல தோல்விகள் கண்டும் உன் விடா முயற்சியை தொடர்ந்தாயே..!! அப்போதே நீ வெற்றி பெற்று விட்டாய்! ஒரு முயற்சியாளனாக...!!
உன் மேல் வீசப்பட்ட நக்கல், நையாண்டிகளையும் சிரிப்புடன் சந்தித்தாயே!!! அப்போதே நீ வெற்றி பெற்று விட்டாய் !! ஒரு மனிதனாக...!!
உங்கள் பெறுபேறுகள் , நீங்கள் எழுதிய குறித்த வினாப்பத்திரத்திற்காக பெறும் பேறே அன்றி, உங்கள் வாழ்க்கையில் பெறப் போகும் நிலையான பேறு அல்ல!!! எம் வாழ்வு அத்தினத்தையும் கடந்து தான் போகும்.. முயற்சியே உன்னை வெற்றியாளனாக்கும்!!!
பரீட்சையில் வெற்றியா? தோல்வியா? என்று பார்க்காதே... அது நிலையானதல்ல!! உயர்தரத்தில் வழுக்கிய பலர் அவர்களது வாழ்வில் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் !!
துவண்டு விடாதே... வெட்டுப்புள்ளியைக் கண்டு!! அது அரசாங்க பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்ய தீர்மானிக்கப்படும் வெட்டுப்புள்ளியே அன்றி உன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முற்றுப்புள்ளியன்று. !!!
உன் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டியவன் நீயே...!!!
பெற்றோர்களே!!! சுற்றத்தார்களே!!! பெறுபேறுகள் கேட்கும் பெயரில், நொந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்!! இவர்களை கலங்கடிக்காதீர்... பாவம் இவர்கள் ! எதிர்கால தூண்கள் இவர்கள்!!! தைரியம் கொடுங்கள்; ஆலோசனை கொடுங்கள்; வழி காட்டுங்கள்!! உங்கள் பிள்ளைகள் நல்ல பெறுபேற்றை பெற்றதுக்காக இன்னொருவர் பிள்ளையை தாழ்வு மனநிலையோடு நோக்காதீர் !!
மாணவர்களே !! எதிர்காலம் உங்கள் கையில்...!! " நீ சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தால், உன்னை தடுக்க யாராலும் முடியாது!" என்ற உணர்வுடன் போராடு!! இன்னொருவரின் பாதையில் செல்ல எத்தனிக்காதே!!! தெரிவு செய், உனக்கான ஒரு புது பாதையை!!! நீ இன்று பார்த்தது ஒரு பரீட்சை தான்... நீ காண வேண்டிய பல பரீட்சைகள் காத்திருக்கின்றன உன் முன்னே!!!
போராடு மூச்சுள்ளவரை ! உன் இதயம் போராடும் வரையில் தான் உன் மூச்சு இருக்கும்!! அதே போல நீ உன் இலட்சியத்திற்காக போராடு!! வெற்றி பெறுவாய்!!!
இவன் : வாழ்க்கையில் வெற்றிக்காய் போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவன் !!!



- Ifham Aslam - M.Sc in Medical physics (reading

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!