கூண்டு மனிதனும் அவ்விரு கண்களும் !!

ஆமை வேக நகர்வுடன் வாகன நெரிசலினூடு காலி வீதியில் ஓடும் பஸ் வண்டியில், அதனிலும் வேகம் குறைந்த விரிவுரைகளை நாள் முழுதும் கேட்ட களைப்புடன் ஜன்னலோர காற்றை சுவாசிக்க நாடி ஜன்னலைத் திறக்க, அவ்வொலி கேட்டு அருகே சமந்தரமாய் நகர்ந்துகொண்டிருந்த வண்டியினுள்ளிருந்து இரு கண்கள் பார்வை எனும் கூர்வாளை வீசியது!
அக் கூர்பார்வை நாலா பக்கமும் வீச, நானும் அதன் பார்வை வீச்சினுள்ளே இருப்பதை ஊகித்தேன். அவை ஏதோவொரு புதுமையை கண்ட ஆர்வமும், பல நாட் காத்திருப்பின் பின் எதோ ஒன்றைப் பார்த்த பேரானந்தமும் ஒரு சேர வெளிப்படுத்தினவே! குதூகலத்தில் துள்ளி நூற்றெண்பது பாகையில் சுழன்று நாட்டியம் ஆடும் அக் கண்களில் ஒரு புதுமையை உணர நானும் ஒரு மறைமுக பார்வையாளனானேன்!
அக் கண்கள் பல காட்சிகளை இரைமீட்டிக்கொண்டிருந்தன; பழைய நினைவுகளில் சிலாகித்துக் கொண்டிருந்தன.
சிறு கணத்தில் அவை ஆடியோய்ந்த பம்பரம் போல் சடுதியாக நிற்க, “பூட்டிடப்பட்ட சிறைக் கைதி” போல் வலுவிழந்து சோர்வடைந்து போனதே!, கவலையும் ஏக்கமும் இயலாமையும் அக் கண்களில் ஒட்டிக் கொண்டதே!. திடீர் வானிலை மாற்றம் போல் அக் கண்களில் ஓர் மாற்றத்தைக் கண்டதும் அவற்றின் நோக்கு திசையில் நான் கண்ட அச் சிறு காட்சியே, எனை இவ்வாக்கத்தை எழுதத் தூண்டியது! ஓரிரு நொடியில் நடந்த இச்சிறு நிகழ்வோ பல பாடங்களைக் கற்பித்துச் சென்று விட்டதே!!
தன் குழந்தையுடன் கொஞ்சுமொரு தந்தையைக் கண்டதே, அக் கண்களின் திடீர் மாற்றத்திற்கு காரணம்!
கண்களுக்குப் பூட்டிட்டவன் கையிலோ விலங்கினால் பூட்டப்பட்டிருந்தது! “கைகளில் விலங்கும், கம்பியடைப்பிடப்பட்ட சிறை வண்டியும் இல்லாதுவிடின், உடனே வீடு சென்று தன் குழந்தையைத் தூக்கி கொஞ்சலாமே!” எனும் ஏக்கப் பார்வை வீசினான் அக்கண்களையுடைவன்!!
ஆம்! மொட்டைத்தலை, சிறைச் சூட்டினால் கறுத்துப் போன முகமுடைய, நீதிமன்றத்திலிருந்து சிறை நோக்கிச் செல்லும், 35 வயது மதிப்புள்ள ஒரு சிறைக் கைதியே, அக் கண்களுக்கு சொந்தக்காரன்!
நான்கு சுவர்களின் மத்தியில் இவ்வாறான பல கண்கள் தினம் தினம் ஏங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. மனைவி மக்களுக்கு ஆதரவாக இருந்து பிள்ளைகளைக் கண்காணித்து வளர்க்க வேண்டிய இவர்களோ, தாம் செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப் படுகிறார்கள். அக்குழந்தைகளின் எதிர்காலமோ கேள்விக்குறியாகிறது, அநாதரவாக விடப்படும் இவர்களை சமூகம் மதிக்காததாலும், தந்தையின் கண்டிப்பு இக் குழந்தைகளுக்கு கிடைக்காமையால் பெரும்பாலும் இவர்களும் குற்றவாளிகளாகவே உருவெடுக்கின்றனர்.
சிறை சென்றபின் குடும்பத்தைப் பற்றி நினைக்கும் இவர்கள் குற்றம் செய்யும் முன்னர் குடும்பம் பற்றி நினைந்திருந்தால் குற்றம் நடந்திருக்க வாய்ப்பு குறைவே. இவர்களின் இந்நிலைக்கு இவர்களின் சிறுபராய வளர்ப்பும் ஒரு காரணமாகும்.
அளவுகடந்த செல்லமும், கண்டிப்பின்மையும் பெரும் ஆபத்துக்களை விளைவிக்கும். முன்கோபிகளாகவும் அடங்காத பிள்ளைகளாகவும் வளர்க்கப் படும் பல பிள்ளைகள் எதிர்கால குற்றவாளிகளாக உருவாகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பார்கள்; அளவு கடந்த பாசத்துக்கும் இது பொருந்தும். பிள்ளைகள் கேட்கும் பணத்தை வாரி வழங்குவதும், கையில் ஆடம்பர கைத் தொலைபேசிகளை வாங்கி கொடுப்பதும் பெருமைக்குரிய விடயம் என்று நினைத்து விடாதீர்கள். உங்கள் கண்காணிப்பும் கண்டிப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை என்பதே.
சிறார்கள் தம்மை ஹீரோக்களாக நினைத்து செய்த பல குற்றங்களை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பல சிறுவர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டனர், அன்றாடம் திரை மறைவில் அவர்களின் ஆட்டம் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இவர்களின் போக்கு இவர்களின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல இந்த சமூகத்திற்கே பெரும் ஆபத்தை விளைவிக்கும். அதிகமான குற்றவாளிகள் போதையினால் குற்றம் புரிந்தவர்களே! போதை பாவனையே சமீபத்திய இனக் கலவரம் நிகழ ஆரம்பப் புள்ளி என்பதை மறவாதீர்.
குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த ஊரார்களின் பங்களிப்பும் மிக அவசியமே! கண் முன்னே போதை பாவனையில் யாராவது ஈடுபடுவது கண்டால் யார் பிள்ளையாயினும் பரவாயில்லை ஏசி விரட்டுங்கள், அல்லது போதை ஒழிப்பு மையத்திற்கு தகவல் கொடுங்கள்!
கஞ்சா, அபின், தூள் இன்னும் பல பெயர் கொண்ட போதைவஸ்துக்கள் நம் சிறார் மத்தியில் புழங்கி கொண்டு தான் இருக்கின்றன; இவ்வாறான நச்சுக்களை முளையோடு கிள்ளி எறிந்தாலே நம் சமூகம் எதிர்காலத்தில் தலை தூக்கி நிற்கும்!! இல்லையெனில் நம் பிள்ளைகளும் எதிர்காலத்தில் கூண்டு மனிதர்கள் தான்!!

இப்ஹாம் அஸ்லம்
M.Sc Medical Physics (Reading)
University of Colombo

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!