பாவம் அந்தப் பிள்ளைகள்!



" வாப்பா!! வாப்பா!!" என்று அன்புடன் ஒரு பிள்ளை தன் தந்தையை அழைக்கும் ஒலி கேட்டு, கலங்கும் கண்கள் பல உண்டு! அதில் சிலர் தந்தையை இழந்தவர்கள் ; சிலரோ தந்தைகளால் இழக்கப்பட்டவர்கள் !! ஆம், கணவனால் கைவிடப்பட்ட விதவைத் தாயின் பிள்ளைகள் !!! தன் தந்தை உயிருடன் இருந்தும் அவர்களை உரிமையுடன் அழைக்க முடியாமல் தவிக்கும் தவிப்பை எண்ணுகையில் , பல நாட்கள் கண்ணீரை காணாத கண்களும் கலங்குகின்றனவே!!!
புரிந்துணர்வற்ற பெற்றோருக்கு பிறந்ததை அன்றி , வேறு என்ன பாவம் தான் இவர்கள் செய்தார்கள் ?!! தன் தாயின் அரவணைப்பில் வாழும் இவர்கள் , உண்மையிலேயே சாதனைப்பிள்ளைகளே!!!
"உனக்கு நான்"; "எனக்கு நீ"; என்று திருமணம் முடித்து ஆரம்ப நாட்களில் நினைக்கும் இவர்கள் , "உனக்கு நான் எதற்கு ?!", "எனக்கு நீ எதற்கு ?!" என்று பேசும் அளவுக்கு புரிந்துணர்வற்ற வாழ்க்கையை வாழ்ந்து, இலகுவாக விவாகரத்து செய்து பிரிந்துவிடுகின்றனர்; இவ்விடைவெளியில் பிறந்த தம் பிள்ளைகளின் எதிர்காலம் மறந்தவர்களாய்!!!
அவர்களைப் பொறுத்தவரையில் இது என்னவோ ஒரு பெரிய சாதனை!! ஆனால், சோதனைகளை சந்திக்க வேண்டியது அவர்களின் பிள்ளைகளே!! ஒன்றும் அறியாத பிஞ்சுகளே!!
" இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது தானே" என்று கேட்க கூடும் அவர்கள்; "நபிகள் நாயகமவர்களால் வெறுக்கப்பட்ட விடயம் இந்த 'விவாக ரத்து' "என்பதை மறந்து!! "அல்லாஹ்வின் அர்ஷே ஆடும் ஒரு விவாகரத்தால்" என்பதையும் மறந்து அவர்கள் அவ்வாறு கேட்கக் கூடும்!
ஒரு விவாக ரத்துக்காக காதியார் முன்னிலையில் வாதாடும் நீங்கள் ; உங்கள் பிள்ளைகளுக்காக ஏன் வாதாடி ஒரு புரிந்துணர்வுக்கு வரக்கூடாது!!!
கணவன், மனைவிக்கிடையில் புரிந்துணர்வின்மையே விவாகரத்துக்கான முதற்படி !! உங்களுக்காக வாழாவிடினும் உங்கள் பிள்ளைகளின் சந்தோசத்திற்காக வாழ முற்படுங்கள் !!
அவர்களின் எதிர்காலத்திற்காக நீங்கள் உங்களைத் தயார்படுத்துங்கள் ! உங்களின் பிள்ளைகள் வழி தவறிப் போக நீங்களே காரணமாகி விடாதீர்!! அதைப் போல ஒரு கொடுமையை எங்கும் காண முடியாது!!
பல விவாகரத்துக்களுக்கு காரணமாக ஆண்கள் தான் இருப்பதை எண்ணி கவலையடைகிறேன்! அவர்களின் அழுத்தங்களை மனைவியின் மீது கோபங்களாக பிரயோகித்து ; இருவருக்கிடையிலும் புரிந்துணர்வுகள் அற்றுப் போக காரணமாகி விடுவார்கள்!!
இதற்கு சில பெண்களும் காரணமாக இருக்கத்தான் செய்கிறார்கள்; கணவனின் நிலையறியாமல் தமக்கு வேண்டியதை எவ்வாறாவது அடைய வேண்டும் எனும் குறிக்கோளில் , கணவர் மீது அழுத்தங்களை கொடுப்பதும் உண்டு!!
இருவரும் மனம் விட்டு பேசுவதே இதற்கு தீர்வாகும்!!
விவாகரத்து கேட்கும் பெற்றோர்களே சற்று சிந்தியுங்கள்; உங்கள் பிள்ளைகளை அனாதரவாக விட்டுச்செல்லப் போகிறீர்களா?? கணவன்மாரே சற்றுச் சிந்தியுங்கள் ; உங்கள் பிள்ளைகள் கவனிப்பாரற்று சமூகத்தில் அவலங்களை சந்திக்க வேண்டுமா?? படிப்பு , மார்க்கம், ஒழுக்கம் இவை ஒரு தந்தையின் கண்டிப்பாலேயே வழங்க முடியும்!
விவாகரத்து விடயங்களில் சுற்றத்தாரினதும் , உறவினர்களினதும் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நீங்கள்; ஏன் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தித்து, அவர்களின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது?!! ஏன் , உங்கள் பிள்ளைகள் மீது அன்பு இல்லையா?!!! உங்கள் சுய கெளரவம் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை விட பெரிதாகி விட்டதா??? விவாகரத்திற்கு பின்னர் , என்றோ ஒரு நாள், உங்கள் பிள்ளைகள் பற்றி நீங்கள் நினைத்துக் கவலையடையத் தான் போகிறீர்கள்... ஏன் விவாகரத்திற்கு மறு நாளே நீங்கள் சிந்தித்துக் கவலையடையக் கூடும்!!! பின்பு நீங்கள் இருவரும் உங்கள் பிள்ளைகளுக்காக இணைய மனம் நினைத்தாலும் இஸ்லாமிய சட்டத்தில் நேரடி இடமில்லை என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள்!!! நீங்கள் உங்கள் முடிவை எண்ணி கவலையடையத் தான் போகிறீர்கள்!!!
சில ஆண்களின் ஆதிக்க எண்ணங்களால் நடக்கும் விவாகரத்தின் பின், கணவனின் ஆதரவின்றி ஒரு தாய் தனது பிள்ளைகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரின்; அந்தத் தாய் ஒரு சாதனைத் தாயே!! ஏன் ; அப்பிள்ளைகளும் சாதனைப் பிள்ளைகளே!!!
தந்தையின் ஆதரவை வேண்டி கண்ணீர் வடிக்கும் பிள்ளைகளின் சாபத்திற்கு ஆளாகிவிட வேண்டாம்.... இதற்கு பெற்றோர் இருவருமே பதில் சொல்ல வேண்டி இருக்கும்!!!
05.02.2018 இப்(f)ஹாம் அஸ்லம் கொழும்பு பல்கலைக்கழகம் (Reading MSc in Medical Physics) பேருவளை

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!