அதிகாரம் பிடித்த பேரரசுகளால் சிக்கிச் சின்னாபின்னமாகும் மனித நேயம்!!

அமைதியாய் வாழ்ந்த நாடு அது! பாலைவனத்திலும் ஒரு சோலை வனமாய் இருந்த நாடு அது!! பாரம்பரியங்களும் கலாச்சார விழுமியங்களும் நிரம்பி வழிந்த அந்த நாட்டின் வீதியெங்கிலும் ரத்த ஓட்டம் வழிந்து ஓடுகிறதே!! எண்ணை வளம் மிகுந்த அந்நாட்டின் அவலமாய் எண்ணைக்கிணறுகள் மாறிப்போனது காலம் செய்த கொடுமையே!!
மனிதாபிமானம் மரணிக்கப்படுவதை சிசுக்களின் மரணங்கள் மூலம் உணர்த்தச் செய்வதற்கு எப்படித் தான் மனது இடமளித்தது அக்கொள்ளைக் காரர்களுக்கு!!!
பிஞ்சுகளின் அவலங்களும், பெண்களின் ஓலங்களும் , ரத்த ஆறுகளின் நீளங்களும் , அப்பாவிப் பொது மக்களின் மரணங்களும் தொடர்கின்றனவே; இதுவும் ஒரு தொடர்கதையாய் ஆனதே!!
உலகை ஆள நினைக்கும் இரு பேரரசுகளின் விளையாட்டு மையத்தளமாக சிரியா மாறிப் போனதே!! அதன் எண்ணை வளத்தை சுரண்டுவதற்கு பல அரசியல் முன்னெடுப்புகள் மறைமுகமாக அவ்விரு பேரரசுகளாலும் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு ; அவர்களின் இறுதி இலக்காக அந்நாட்டு மக்கள் பலி ஆடுகளாய் கள முனையில் நிறுத்தப்பட்டு ஒரு சோக வரலாறு ரத்தங்களால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறதே!!!
உலக அமைதிக்காய் போராடுகிறோம் உளரிக்கொண்டிருக்கும் ஐநா மைனா பிடிக்கப்போய் விட்டதே!! மனிதநேய அமைப்புகளும் மெளனித்து விட்டதே!! மேற்குலக செய்தி நிறுவனங்கள் தூக்க மாத்திரையுடன் தூங்கிக் கொண்டிருக்கிறதே!!
பேரரசுகளே உங்கள் நவீனரக ஆயுதங்களை பரிசோதிப்பதற்கு அப்பாவி மக்களா கிடைத்தார்கள்? இரசாயன வாயுத் தாக்குதல்களினால் சுவாசிக்க முடியாமல் இறந்த சிறுவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?!! நீங்கள் ஒரு நாட்டின் எதிர்கால சந்ததியினையே அழித்து விட்டீர்கள்!!!
மருத்துவமனைகளை உங்கள் இலக்காக மேற்கொண்டால் காயப்பட்டோருக்கு மருத்துவம் பார்ப்பது எங்கே!! வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டால் தஞ்சம் புகுவது தான் எங்கே!
இரவில் உலகமே நிம்மதியாய் தூங்க , நிலையான தூக்கத்தை எதிர்பார்த்தவர்களாய் ஒரு மக்கள் கூட்டம் ஒவ்வொரு நொடியையும் கடத்துவதை நினைக்கையில் என் தூக்கமும் களைகிறதே!! பெற்றோரை இழந்த பிஞ்சுகள் நடுத்தெருவில் ஏக்கப்பார்வைகளை வீசியும் ; தனக்கு கிடைத்த செயற்கை சுவாச கருவியை தன் கையில் உள்ள தங்கைக்கு மாற்றி விட்டு தனதுயிரைத் துறந்த வீரச் சிறுமியினதும் ; இது போல பல சிறார்கள் நாதியற்று நிற்பதைக் கண்டும் மனிதாபிமான அமைப்புகளும் ,ஐநாவும் குரல் கொடுத்து ஒரு தீர்வை கொண்டுவராமல் மெளனித்து விட்டதை விட கொடுமையான விடயம் சமீபத்திய வரலாறு கண்டதில்லை!!!
பிஞ்சுகளே!! விளையாடித் திரிந்த உங்கள் வாழ்வில் சில முதலைகள் விளையாடி விட்டனர்; உங்கள் விளையாட்டுக்களை சுவனத்தில் தொடர பிரார்த்திக்கிறேன்!!
இது ஓர் உள்நாட்டு யுத்தம் இல்லை; உள்நாட்டில் உருவாக்கப்பட்ட யுத்தம் இதற்கு அவ்விரு பேரரசுகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும்!! அவர்களின் பணத்திமிரும் அதிகாரத்திமிரும் ஓய்வது எப்போது?!! உங்களுக்குள் பிரச்சினை எனின் இரு தலைவர்களும் மல்யுத்தம் வைத்து தீர்த்துக் கொள்ளுங்கள்!!! இல்லையெனின் உங்கள் இரு நாட்டு மக்களையும் வாள் ஏந்தி போர் புரிந்து உங்களில் வெற்றியாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்; உங்கள் ஆயுத களஞ்சிய சாலைகள் தூசி தட்டி விடும் என்பதற்காக ,மறைமுகமாக அரசியல் ஆட்டமும் ஆயுத வியாபாரங்களையும் மேற்கொண்டு அப்பாவி பொதுமக்களின், சிறார்களின் ஆயுளைக் கைப்பற்றாதீர்கள்!!
அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதற்கு சுற்றியுள்ள நாடுகளே அமைதி காக்கும் அவல நிலை முற்றிலும் மனிதாபிமானமற்ற நிலையே!! அயல்நாடுகளே!! உங்கள் காதுகளில் பஞ்சை அடைத்து விட்டீர்களா?? குண்டோசைகளும் சிறார்களின் அழுகைகளும் ,அப்பாவிப் பொதுமக்களின் கதறல்களும் வெகு தொலைவில் இருக்கும் மக்களின் காதிலேயே ஒலிக்கும் போது, ஏன் உங்கள் காதுகளில் ஒலிக்கவில்லை?!!
இவ்விடயங்களை மூடி மறைப்பதையே சில அரசுகள் விரும்புகின்றன!! மனிதாபிமான உணர்வுள்ள இளைஞர்கள் சமூக வலயதளங்களில் இயங்கும் வரையில் அது நடக்கவே நடக்காது!!


வரலாறு பல சிரியாக்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறதே!! அதிகாரத்திமிர் உள்ள அரசுகள் இருக்கும் வரை , இதுவும் ஒரு முடிவற்ற தொடர்கதையே!!

- Ifham Aslam - M.Sc in Medical physics (Reading)

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!