போதைப் பாவனைக்கெதிராய்க் குரல் கொடுத்து நம் சிறார்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!!

இன்று உதைபந்தாட்டம் தொடர்பான பதிவொன்றைக் கண்டேன். நீண்ட நாள் என் மனதினுள் தேங்கி வடுவாய் இருந்தவொன்று திரும்பவும் என் நினைவுக்கு வந்ததே இந்தப் பதிவிற்கான காரணம்.
அப்போது ஏழாம் வகுப்பில் படித்த காலம், உதைப்பந்து விளையாட ஆரம்பித்த காலமது. பாடசாலையில் வாரத்தில் இரண்டு நாட்கள் விளையாட்டுக்கென இரு பாடவேளைகள் ஒதுக்கியிருந்தன. அவ்வேளைகளில் கிரிக்கெட் அல்லது உதைப்பந்து தான் விளையாடுவோம். பாடசாலை விட்ட பிறகும் பாடசாலை மைதானத்தில் உதைப்பந்து விளையாடியதும் உண்டு. விடுமுறை தினங்களில் மைதானமே கதியென்று இருந்தோம். பல தடவைகள் குர்ஆன் மத்ரசா, அகதியா,மாலை நேர வகுப்புக்கள் என பலவற்றிற்கும் கட் அடித்துவிட்டு விளையாடச் சென்று வீட்டில் அடி வாங்கிய சம்பவங்களும் உண்டு. இக்காலங்களில் எமக்கு ஒருவன் அறிமுகமாகினான். எம்மை விட இரு வயது மூத்தவனாயினும் பெரியவர்களுடனும் விளையாடும் அளவுக்கு திறமையாளன்.
நானாமார்களும் அவனைப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வர். உதைப்பந்து என்றாலே அவன் நாமம் தான் நமக்கு ஒலிக்கும். பாடசாலை அணியிலும் இடம்பெற்று பலவெற்றிகளுக்கு காரணமாய் அமைந்து 15 வயதுக்கு கீழோருக்கான இலங்கை அணியிலும் இடம்பெற்று உலகம் சுற்றியுமிருக்கிறான். அவனை பலதடவைகள் அவதானித்திருக்கிறேன், அவனது ஆட்டப் பாங்கு சற்றே வித்தியாசமானது. அவன் விளையாடும் போட்டிகளில் எல்லோர் பார்வையும் அவன் மேல் தான் இருக்கும். எவ்வளவு வேகமான பந்தையும் லாவகமாகக் கட்டுப்படுத்துவான். அவனது கால்களில் பந்து கிடைத்தால் போதும் மேஜிக் காட்டுவான். எத்தனை பேரையும் தனி ஆளாய் சமாளிப்பான். அவன் கால்களில் இருந்து இலகுவில் பந்தை பறிக்க முடியாது. அவன் திரும்பித் திரும்பி ஆடும் விதமும், அவன் பந்தை இன்னொரு வீரனுக்கு நகர்த்திவிட்டு ஸ்டைல் ஆக ஓடும் முறையும் அழகாக இருக்கும். கோல் அடிப்பதில் கில்லாடி.
தொலைக்காட்சிக்கும் எமக்கும் பெரிய தொலைவிருந்ததால் சர்வதேச கழகங்கள் பற்றி பெரிதாய் அறியாத காலமது. பத்திரிகைகளே ரோனால்டினோ, சிடான், பெக்கம், ரொனால்டோ (பிரேசில்) இவ்வாறான பெயர்களை அறிமுகம் செய்தது. "இவர்களை எல்லாம் கண்முன்னே கொண்டு வந்தவன் இவன்" என்பது அவன் ரசிகன் என்றவகையில் எனக்கும் பெருமையே!!
பின்னாட்களில் தெரிந்து கொண்டேன் "இவன் விளையாட்டு உலகத்தரமானது" என்று. சாதாரன தர பரீட்சை முடிந்தபின் இவனது விளையாட்டு மேலும் மெருகேறியிருந்தது. உள்ளூர் அணிகள் இவனைப் போட்டியிட்டு அழைத்தன. இவன் இலங்கையிலல்லாது ஐரோப்பாவில் ஏதோ ஒரு சிறு ஊரிலாவது பிறந்திருந்தால் இன்று நெய்மாருடன் போட்டியிட்டுக் கொண்டிருப்பான் என்பது உண்மையே! ஆனால் அவன் பிறந்தது உதைப்பந்துக்கு முக்கியத்துவம் குறைந்த இலங்கையில் என்பது வருத்தத்துக்குரியதே!
அன்றொருநாள் அவன் விளையாடுவதைக் காணக்கிடைத்தது, நானும் ஆசையாய் வண்டியை நிறுத்தி மைதான ஓரத்திலிருந்து அவனை நோக்கினேன். அவனது ஆட்டத்தில் வேகம் இல்லை, பந்தைக் கட்டுப்படுத்தும் திறன் குறைந்திருந்தது. இலகுவில் பந்தை விட்டுக்கொடுப்பதைக் கண்டேன். முன்னெல்லாம் அவனிடமிருந்து பந்தைப் பறித்தால் அவன் சொத்தைப் பறித்து போல் விரட்டிச் சென்று மீண்டும் பந்தைப் பெற்று புன்சிரிப்பொன்றை வீசுவான். இப்போதோ 'ஏனோ தானோ' என விளையாடுகிறான். பக்கத்திலிருந்த ஒருவரிடம் கேட்டேன் "இப்போது, இவனின் பழைய ஆட்டம் இல்லை எனா". ஆம் தம்பி, தூளும், சிகரெட்டும் தம்பி. பேசி வேலை இல்லை. இவனுக்கு ஒரு வருடத்துக்கு முன்னாடி சுகமில்லாமல் போனது. மூளை பாதிச்சாம். ICU விலும் வெச்சாங்க. இப்போ பரவாயில்ல தம்பி. இப்போல்லாம் விளையாடினால் டயர்ட் (tired) ஆகுறார்,எப்படி இருந்தவன் பார்த்திங்களா.. எல்லாம் தூளும் சிகரெட்டும் காட்டிய வேலை. " என்று பதிலளித்தார்.
அதைக் கேட்டதும் கவலையுடன் நகர்ந்து நண்பர்களிடம் விசாரித்த போது "அவன் அவனையறியாமலே போதைக்கு அடிமையாகிருக்கிறான்" தெரிய வந்தது. நண்பர்கள் வட்டாரத்திலிருந்த போதை பொருள் பாவனை இவனையும் ஆக்கிரமித்துள்ளது. மூக்குப்பொடி, பான்பராக் இவையே பெரும்பாலும் இவன் வாயில் இருக்குமாம். போதை தலைக்கு ஏறி ஏறி அவனது நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்து அடிக்கடி மயக்கமுற்று இறுதியில் அவனைக் கோமா நிலைக்கும் ஆளாக்கியிருக்கிறது இந்த போதை. பிறகு அந்நிலையிலிருந்து மீண்டு வந்து இன்றும் மருந்து மாத்திரைகளுடனே அவனது காலம் நகர்கிறது.
இன்னொரு நாள் அவனை பாதையில் கண்டு நலம் விசாரித்த போது, "முந்தைய நாட்கள் போல இல்லைடா மச்சான், கொஞ்சம் தூரம் ஓடினாலே களைப்புறுகிறேன், பழைய வேகம் இல்லைடா. வேலைக்கும் போக கஷ்டம். மாமாட ஷாப்ல அவருக்கு துணையாய் இருக்கிறேன், இப்படியே காலம் ஓடுது" என்றான்.
இப்போது அவன் போதை பாவனையை விட்டுவிட்டான். இருந்தும் என்ன பயன், அதன் கோரப்பிடியிலிருந்து விடுபடுவதற்குள் அவன் இளமையும், உடல் ஆரோக்கியமும் சின்னாபின்னமாகி விட்டதே!!
அவனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதே! இவனைப் போல பல இளைஞர்கள் போதைக்கும் புகைப்பிடித்தலுக்கும் அடிமையாகி தம் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
பல உள்ளூர் பிரபலங்கள் போதையால் ஆரோக்கியம் இழந்து நடக்கவே தெம்பில்லாதிருக்கின்றனர்.
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளையும் எந்நேரமும் கண்காணியுங்கள்! போதைபொருள் என்பது எள்ளளவே!! காட்சட்டைப் பைகளையும், புத்தகப் பைகளையும் அடிக்கடி சோதனையிடுங்கள். நம் பிள்ளைகள் எல்லாம் அவ்வாறு செய்யாது என்று பொடுபோக்காக இருந்து விட வேண்டாம். போதை அவர்களை நல்ல நடிகனாகவும் மாற்றும். ஏன், அது உங்களை ஏமாற்றவும் கற்றுக்கொடுக்கும்.
போதைப் பாவனைகள் பாடசாலைகளில் இரகசியமாக சில மாணவர்களிடையே புழங்குகின்றதென்பதை புள்ளிவிபரங்கள் அறிவிக்கின்றன. போதை பொருள் வியாபாரிகளின் பிரதான இலக்கே பாடசாலை மாணவர்கள் தான் என்பதை என்றும் மறவாதீர். பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களும் ஊர் மக்களும் இணைந்தால் மாத்திரமே இச் சமூக அவலத்தைக் களைய முடியும். எங்காவது போதைப்பொருள் புழங்குவதாக அறியக் கிடைப்பின் உரிய நடவடிக்கை எடுத்து சிறார்களின் எதிர்காலத்தை சிதைய விடாது பாதுகாப்பது எல்லோரினதும் கடமையாகும்.
சிறந்த பிரஜைகளை உருவாக்க வேண்டிய சமூகக் கடமை எல்லோருக்கும் இருக்கிறது என்பதை மனதில் கொண்டு, போதை விழிப்புணர்வுகளை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்தல் வேண்டும்.
உள்ளூரைச்சேர்ந்த ஒருவனின் உதவியுடனேயே போதை வியாபாரிகள் வலம் வருகின்றனர். அக்கருப்பாடுகளை இனங்கண்டு தோலுரித்தால் பெரியவோர் மாற்றத்தை உண்டாக்கலாம்.
இங்கே குறிப்பிட்ட அந்த நபரைப்போல் உங்கள் சிறார்களின் எதிர்காலமும் மாறி விடக்கூடாதே!!!
போதைக்கெதிராய்க் குரல் கொடுப்போம், நம் சிறார்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!
- 28.07.2018 - - Ifham Aslam (Beruwala) - Reading MSc in Medical physics(UOC) -

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!