தலைவரே!! என்னைப் புலம்ப விட்டீரே!!

காலம் மாறி விட்டது! விலைவாசியும் ஏறி விட்டது! அரசியல் கட்சிகளோ கூடி விட்டது!! வழமை போல் தேர்தலும் முடிந்துவிட்டது!! என் வயசும் ஓடி விட்டது!! இருந்தும், என் வாழ்க்கை மட்டும் மாறவில்லையே!!
வோட்டுப் போடுங்கள் , ரோட்டுப் போடுகிறேன் என்று சொன்னீர்கள் ; நாங்கள் போட்ட வோட்டுக்களால் நீங்கள் நல்ல இடத்தில் இருக்கிறீர்கள் , நீங்கள் போட்டுத் தந்த ரோட்டில் கல்லு மட்டும் தான் மிச்சம் இருக்கிறது !!
தலைவரே!! என்னைப் புலம்ப வைத்து விட்டீரே!!
" மக்களுக்காக நான் ; மக்கள் பணியே முதற்பணி" என்று பிரச்சாரக் கூட்டங்களில் தொண்டை கிழிய பேசினீரே! ; உங்களை நம்பிய தொண்டர்களின் தொண்டையை இப்போது கிழிய வைத்தி விட்டீரே!!
நாமும் எம் பாடும் என்று வாழ்ந்து கொண்டிருந்தோம் ; தேர்தல் என்று சொன்னவுடன் ,தலைவரே உமக்காக நாம் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு களத்தில் குதித்து கட்சிக்காய் பாடு பட்டோமே!! இப்போதோ நீங்கள் எங்களை மதிக்காமல் உங்கள் சோலியைப் பார்க்க ஓடி விட்டீரே!!!
பிள்ளைகளின் படிப்புக்காக வைத்திருந்த காசை எடுத்து கட்சிக்கொடிக்காக கொடுத்தேன் ; வீட்டு செலவுக்காக வைத்திருந்த காசை எடுத்து பைக் இற்கு பெற்றோல் அடித்தேன்!! மருந்துக் காசில் பட்டாசுகள் வெடிக்க வைத்தேன்!!எல்லாக் கூட்டத்திலும் முதல் ஆளாக நின்றேன்!! தலைவரே , உங்கள் வார்த்தைகளை அருள் வாக்காக கேட்டேன்; வாக்குக் கிடைத்ததும் தலைவரே; மின்னலாய் மறைந்து விட்டீரே!!!
ஜெனீவாவே காணாத பல ஒப்பந்தங்களை எங்களுடன் போட்டீர்கள் ; ஐநாவே காணாத பல திட்டங்களை தீட்டினீர்கள்!! ஓங்கி எழுந்த சுனாமி என நாங்கள் நினைத்த வேலையில் , நீங்களோ ஒரு அரசியல் பிணாமி என சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே!!
நாங்கள் உங்களிடம் பங்கு கேட்க நேரிடும் என்று நினைத்து எங்களுக்கு சங்கு வைத்து விட்டீரே!!! மாற்றம் ஒன்றே மாறாதது என்று வைரமுத்து எழுதினார் அன்று; " ஏமாற்றம் ஒன்றே தான் மாறாது" என்று இந்த ஏழை புலம்புகிறேன் இன்று!!
உமக்காக போட்டோம் பல சண்டை; உடைந்தது சில மண்டை !! உங்கள் பின்னால் பவனி வந்த இளைஞர் படை ஏராளம்; கட்சியில் மூத்த உறுப்பினர்கள் தாராளம்; தேர்தல் முடிந்ததும் நீங்களோ மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம்!!
முடிந்ததோ ஒரு தேர்தல்; கற்றதோ பல பாடங்கள்; தலைவரே! நான் மீண்டும் என் அன்றாட வாழ்கைக்கு திரும்ப போகிறேன்; கட்சி பிரிவினைகள் இன்றி வாழப் போகிறேன்!! இருந்தும், தலைவரே!! நீர் என்னைப் புலம்ப விட்டீரே!!!


( பிற்குறிப்பு: இது எந்த கட்சி சார்பாகவோ, எந்தவொரு கட்சிக்கும் எதிராகவோ எழுதப்பட்டதல்ல!! வாக்குகளை வாங்கி விட்டு ஓடி விடும் தலைமைகள் பற்றி ,ஒரு சராசரி மனிதன் பார்வையில் எழுதப்பட்ட ஒரு கற்பனைச் சித்திரமே இது!!!)

- Ifham Aslam - M.Sc in Medical physics (Reading)

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!