வறியோருடன் இணைந்து பெருநாளைக் கொண்டாடுவோம்!!

பெருநாளுக்கு முந்தைய தினம். சிறார்களின் ஆரவாரம் எங்கும் எதிரொலிக்க, நட்சத்திரங்கள் போல் ஒவ்வொரு வீட்டு முன்றல்களும் ஜொலி ஜொலிக்க, கடைத் தெருக்கள் கூட்டம் நிறைந்து பர பரக்க ஊரே கலகலத்துக் காணப்பட்டது. பெருநாட் தினத்தை மகிழ்ச்சியுடன் ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அவ்விரு சிறார்களோ கவலையுடன் கடந்து செல்லத் தயாராய் இருந்தனர். வறிய குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் அவ்விருவரும் பிரதிபலித்தனர்.
வெளியூர்களுக்கு தினசரி கூலித் தொழிலுக்குச் செல்லும் தந்தையின் வருமானம் அன்றாட வீட்டுச் செலவுகளுக்கே போதுமாக இருப்பதால், 'சேமிப்பு' என்பது அவர்கள் வாழ்வில் அரிதிலும் அரிதே! இச்சிறார்களுக்கு கல்வி எனும் சொத்தை அளித்து வந்ததால் அச் சிறார்களுக்கு குடும்ப நிலை பற்றியறியும் மனோ பக்குவம் இருந்தது.
அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்காக பதினான்கு வயது நிரம்பிய மூத்தவர் எட்டு வயதுடைய தம்பியை அழைத்துச் செல்கிறார்.
தான் காணும் காட்சிகள் தன்னுள் ஆயிரம் கேள்விகளை எழுப்ப, ஒவ்வொன்றாக கேட்கத் துவங்குகிறார் அண்ணனிடம். தம்பி: "நாநா, நாநா.. ஏன் எல்லோரும் பாதைகளில் அங்குமிங்கும் பரபரப்பாக செல்கிறார்கள்??". அண்ணன்: "நாளைக்கு பெருநாள் தானே தம்பி, அதனால் தான் இப்படி.. "
தம்பி: " ஓஹ், ஏன் எல்லா வீடுகளிலும் மின்விளக்குகள் ஜொலிக்கின்றன??" அண்ணன்: "நாளைக்கு பெருநாள் தானே தம்பி அதனால் தான் எல்லா வீட்டிலும் விசேஷம் .."
தம்பி: "ஓஹ்.. அப்போ, எங்கட வீடு மட்டும் ஏன் இருட்டா இருக்குது? எங்களுக்கு விசேஷம் இல்லையா?" அவன் கேட்டதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இரு வாரங்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதை எவ்வாறு இவனுக்குப் புரிய வைப்பது எனத் தெரியாது உமிழ்நீரை விழுங்கியவனாய், "தம்பி.. வாப்பா, வேலைக்கு போய் இருக்கார் தானே, அவர் வந்ததும் கரண்ட் பி(B)ல்லை கட்டிவிட்ட பிறகு நாங்களும் லைட் போடுவோம்.. சரியா... "
"நாநா.. நாநா.. அங்க பாருங்க, சின்ன பிள்ளைங்க ஐஸ்கிரீம் தின்றாங்க.. வாப்பாகிட்ட சொல்லி நாங்களும் தின்போம்", அந்தப் பிஞ்சின் வாய் அடங்கிய பாடில்லை.
தம்பியை சமாளித்துக் கொண்டே முன்னோக்கி நடக்கையில் இறுதியாய் ஒரு கேள்வி கேட்டான் தம்பி, அது அண்ணனை ஒரு கணம் ஆட்டுவித்தது. "நாநா நாநா, அங்க பாருங்க.. எல்லா பிள்ளைங்களும் உம்மா வாப்பாவோட உடுப்பெடுக்க கடைக்கு போறாங்க.. நாங்க எப்போ போறது நாநா?? வாப்பா எப்போ வருவார் நாநா?? காலைல புது உடுப்பு உடுத்து தொழுகைக்கு போகனுமே!! எல்லா பிள்ளைகளும் புது உடுப்பு உடுத்து வருவாங்களே நாநா... நாநா... வாப்பா எப்போ வருவார்?? "
தாக்குப்பிடிக்க முடியாத இக் கேள்விக் கணைகளுக்கு வீழ்ந்து விடாமல் கலங்கிய தன் கண்களை மறைத்து சுதாரித்தவனாய் பதிலளித்தான் அவன், " தம்பி, இப்போ மஸ்ஜித் போய் தொழுதுவிட்டு வீட்டுக்கு விரைந்து போவோம்! வாப்பாக்கு கோல் பண்ணி பேசுவோம்" என்றான் அவன்.
தொழுகை முடிந்ததும் வீட்டுக்கு விரைந்தனர் இருவரும். தந்தை சிலரிடம் கடன்பட்டு அவற்றை செலுத்த அவதிப் படுவதையும், பல பெருநாட்களில் தந்தை அவருக்கென புத்தாடைகள் வாங்காது பிள்ளைகளுக்கு மாத்திரமே வாங்கித் தந்தமையையும் நினைத்தவாறே மூத்தவன் நடந்து சென்றான்.
"உம்மா!! எனக்கு எதுவுமே வேணாம்.. வாப்பாகிட்ட சொல்லி, தம்பிக்கு புத்தாடைகள் வாங்கி வர சொல்லுங்க. பாவம் அவன்." வீட்டையடைந்ததும் முதல் கோரிக்கை விடப்பட்டது.
"உம்மா!! வாப்பா எப்போ வாராங்க.. எனக்கு உடுப்பு எடுக்கனுமே.. அவசரமாக வர சொல்லுங்க.." சின்னவரின் வார்த்தைகள் தாயின் கண்களை கலங்கச் செய்தது.
கணவருக்கு அழைப்பு விடுக்கிறார். பெருநாள் செலவுகளைச் சமாளிக்க இன்று மேலதிக நேரம் எடுத்து இரவு வரை வேலை செய்ய வேண்டியிருந்ததாக கணவரிடமிருந்து அறியக் கிடைக்கிறது. "கிடைத்த கூலியில் பெருநாட் செலவுகளைப் பார்ப்பதா?? இரு மகன்களுக்கும் புத்தாடைகள் எடுப்பதா??" எனக் கேட்டவரிடம் மனைவி, "மூத்தவருக்கு குடும்பச் சூழ்நிலை புரிவதாகவும் இளையவருக்கு புத்தாடைகள் வாங்குவோமெனவும் ஆலோசனையளித்தார். அதன்படி இளையவருக்கு ஆடைகள் வாங்கப்பட்டது.
மறுநாள் காலையில் ஊரே கலகலப்படைய ஒரு குடும்பம் மாத்திரம் அமைதி காத்தது. தன் வயதையொத்தவர்கள் வித விதமான புத்தாடைகள் அணிந்து உற்சாகத்தில் வலம்வருகையில் அவர்களின் மத்தியில் நடமாட மனமின்றி வீட்டினுள் முடங்கிக் கிடந்தான் அவன்.
ஊரில் அனைவரும் நாவுக்கு ருசியான உணவு வகைகளை அருந்துகையில், இவர்களோ வழக்கமான பாடலையே பாடிக் கொண்டிருந்தனர்.
அப் பெற்றோர் தம் இக்கட்டான சூழ்நிலையை எண்ணிக் கவலையடைந்தனர். தம் பிள்ளை தம் குடும்ப நிலையை உணர்ந்து அமைதி காத்ததை எண்ணி, பொறுப்புள்ள பிள்ளையை அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினர். இருந்தும் பெருநாளைக் கொண்டாட முடியாது மனம் களங்கினர். இது கதையல்ல. பல உண்மை சம்பவங்களின் ஒரு தொகுப்பு. நம் மத்தியில் இவ்வாறான ஏழைகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் எமக்கோ, அவர்கள் பற்றிய எண்ணங்கள் என்றும் தோன்றுவதில்லை. நம் வயிற்றை வித விதமான உணவு வகைகளைக் கொண்டு நிரப்புவதிலும், தினமொரு புத்தாடையணிந்து சுற்றுலாக்கள் சென்று காலத்தைக் கழிப்பதற்குமே எம் நேரம் செலவாகிறது.
நாம் மாத்திரம் சொகுசு வாழ்க்கை வாழ்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதிலும் குறிப்பாக பெருநாள் தினத்தில் ஒரு சில ஏழைக் குடும்பங்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். பெருநாள் சீக்கிரம் முடிந்து விட வேண்டுமென எண்ணுகிறார்கள். தியாகத் திருநாளையே தியாகம் செய்யும் ஏழைகளும் நம் மத்தியில் இருக்கத்தான்செய்கிறார்கள். ஏழைகள் இனங்காணப்பட்டு மறைமுகமாக சதகாக்கள், ஸகாத்துக்கள் வழங்கப்பட்டு அவர்களின் பொருளாதார நிலை உயர்த்தப்பட்ட வேண்டும். முக்கியமாக பெருநாட்கள் ஏழைகளுடன் சேர்ந்தே கொண்டாடப்படல் வேண்டும். பெருநாள் தினத்தில் வீண் செலவு செய்வதை நிறுத்தி அவற்றை ஸதகா செயதல் வேண்டும்.
முடியுமெனின், ஏழைகளுக்கு உணவளிப்பதையும் வழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். (அத் தினத்திலாவது ருசியான உணவு சாப்பிடட்டும்)
உங்கள் அனைவருக்கும் பெருநாள் தின நல்வாழ்த்துக்கள். 😊
Ifham Aslam M.Sc. In Medical Physics ( Reading)

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!